அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனை நடந்து முடிவுகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,00,000 ஐ நெருங்கி வருகிறது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இப்போது இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2,36,000 ஆக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 5,0000க்கும் மேலுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அமெரிக்க அரசு தள்ளாடி வருகிறது.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வந்து சென்ற நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இரண்டு கட்டமாக செய்யப்படும் சோதனையில் முதல் கட்ட சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை எனத் தெரிய வர இரண்டாம் கட்ட சோதனை தற்போது செய்யப்பட்டது. அதிலும் முடிவு நெகட்டிவ் என வந்துள்ளதால் இப்போது அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.