World News
வங்காளதேசத்தில் புதிய அரசு நாளை பதவிஏற்பு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!
வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கும் என்று ராணுவ தளபதி தெரிவித்திருக்கின்றார்.
வங்காளதேசத்தில் சேக் ஹசீனா தலைமையில் அவாமி கட்சி ஆட்சி செய்து வந்தது. சமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குவதாக கூறி மாணவர்கள் பலரும் போராட்டம் செய்து வந்தார்கள். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்கின்றார்.
பிரதமர் பதவியை சேக் ஹசீனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சகாபுதீன் களைத்துவிட்டார். மேலும் இடைக்கால அரசு அமைப்பது குறித்து முப்படை தளபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுசை இடைக்கால அரசின் தலைவராக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வங்காள தேசத்தில் அமைய உள்ள இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனூசை நியமித்து அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டிருக்கின்றார்.
இந்நிலையில் வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நாளை பதவி ஏற்கும் என்று ராணுவ தளபதி வகார் உஸ் ஜமான் தெரிவித்திருக்கின்றார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இராணுவ தளபதி இடைக்கால அரசின் பதவி ஏற்பு விழா நாளை 8 மணிக்கு நடைபெறும். ஆலோசனை குழுவில் 15 உறுப்பினர்கள் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கின்றார்.