அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த இளம் பெண் உட்பட நான்கு இந்தியர்கள் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
அமெரிக்காவில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு பெண் உட்பட 4 இளம் இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தை சேர்ந்த தர்ஷினி வாசுதேவன், ஐதராபாத்தைச் சேர்ந்த ஆர்யன் ரகுநாத் ஒராம்பட்டி, பரூக் ஷேக், லோகேஷ் பலசார்லா ஆகியோர் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அர்கான்சாசில் உள்ள பெண்டான்வில்லி எஸ்யூவி காரில் பயணித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
டெக்ஸாஸ் மாகாணம் காலேஜ் கவுண்ட்டி பகுதியில் அன்னா நகரில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த காரின் பின்புறம் லாரி ஒன்று மோதியது. இதில் கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. அந்த கார் மீது பின்னால் வந்த நான்கு வாகனங்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் கார் தீப்பற்றி ஏறிந்தது. இதில் காரில் இருந்த நான்கு பேரால் வெளியில் வர முடியவில்லை. அவர்கள் காருக்குள்ளேயே சிக்கி உடல் கருகி பலியானார்கள்.
உடல் தீயில் கருகியதால் உயிரிழந்தவர்களின் அடையாளங்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நால்வருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாத நிலையில் நான்கு பேரும் கார்பூ லிங் செல்போன் செயலி மூலம் காரை வாடகைக்கு எடுத்து சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து கார்பூ லிங் நிறுவன தரவுகளின் மூலம் அவர்களின் உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் மரபணு சோதனை மூலம் உடலை அடையாளம் காணும் பணிகளை போலீசார் நடத்தி வருகின்றனர். அவர்களது உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உதவியை பெற்றோர் நாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.





