Latest News
தாலி கட்டும் சமயத்தில் மாயமான காதலன்… போராட்டம் நடத்தும் காதலி… நடந்தது என்ன…?
தாலி கட்டும் நேரத்தில் காதலன் மாயமானதை தொடர்ந்து காதலி காதலனை திருமணம் செய்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனி பேட்டையை சேர்ந்த நபர் கோவிந்தசாமி. இவரின் மகன் ஸ்ரீதர் பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த முருகேசன் என்பவரின் மகள் அனுசியா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்திருக்கிறார்கள்.
இதையடுத்து இரு குடும்பத்தினருடன் இணைந்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டது. திருத்தணியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் கடந்த 15ஆம் தேதி திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாலி கட்டும் சமயத்தில் மணமகன் ஸ்ரீதர் திருமண மண்டபத்தில் இருந்து மாயமானார். இந்த சம்பவம் மணமகள் வீட்டார் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஜாதியை காரணம் காட்டி மணமகன் ஸ்ரீதர் தப்பி ஓடிவிட்டதாக அனுசுயா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார் மாயமான ஸ்ரீதரை தொடர்ந்து தேடி வந்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் தங்கி இருந்த ஸ்ரீதரை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். டிஎஸ்பி கந்தன் முன்னிலையில் ஸ்ரீதர் மற்றும் அனுசியாவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்பாதித்தனர். இதையடுத்து போலீசார் இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அனுசியாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத ஸ்ரீதர் மறுநாளே மீண்டும் தப்பி ஓடி விட்டார். இதை அடுத்து அனுசியா நேற்று மீண்டும் டிஎஸ்பி அலுவலகம் வந்து தனக்கு நீதி வேண்டும் என்று கூறி போராடி வருகின்றார்.
காதலனுடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் மறுத்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றார். காதலனை திருமணம் செய்வதற்கு 16 நாட்களாக அந்தப் பெண் போராடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.