Latest News
அடேங்கப்பா…! விநாயகர் சிலையில் வைத்து வழிபட்ட லட்டு…. இத்தனை லட்சத்துக்கு ஏலமா…?
விநாயகர் சிலையில் வைத்து வழிபட்ட லட்டுவை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கின்றார் முறுக்கு வியாபாரி.
கடந்த சனிக்கிழமை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து விநாயகருக்கு பிடித்த பண்டங்களை வைத்து வழிபாடு நடத்தினார்கள். மேலும் பல இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு மூன்று நாட்கள், ஐந்து நாட்கள் மற்றும் ஏழு நாட்கள் என்று பூஜை செய்யப்பட்டு பின்னர் ஆறு குளம் மற்றும் கடலில் கரைக்கும் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. மேலும் விநாயகர் கையில் லட்டு வைத்து பூஜைகள் நடைபெற்றன. நேற்று இந்த சிலையை எடுத்துச் சென்று அருகில் உள்ள கண்மாயில் கரைத்தார்கள்.
முன்னதாக சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அதே ஊரை சேர்ந்த 45 வயதான மூக்கன் என்ற நபர் அந்த லட்டை 1,50,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இதனால் கிராம மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வாயடைத்து போயினர்.
ஒவ்வொரு ஆண்டும் இதேபோன்று விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலத்தில் விடப்படும். இந்த ஆண்டு ஏலம் எடுத்த மூக்கனுக்கு அடுத்த ஆண்டு ஒரு பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி சட்டை , 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். ஏலம் எடுத்த மூக்கன் வெளியூரில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.