அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடத்தப்பட உள்ளதாக பரவி வரும் செய்திக்கு தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் சனிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை அரசு பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என்று கூறி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது.
இதனை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்து இருக்கின்றது. இது பொய்யான செய்தி எனவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையில் கொண்ட வேண்டும்.
இது குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 10 உறுதிமொழிகளை எடுக்க வேண்டும் என்று பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகர்கள் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார்கள்.
இதனை திரித்து அரசு பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியதாக தவறான தகவல் பரவி வருவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கின்றது. இது முற்றிலும் பொய்யான தகவல் என்று மறுப்பு தெரிவித்து இருக்கின்றது.





