tamilnadu
ஆணவ கொலை வன்முறை கிடையாது… அது அக்கறை… பிரபல நடிகர் ரஞ்சித் மீது போலீசில் விசிக புகார்…!
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகருமான ரஞ்சித் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் நடித்திருக்கின்றார். பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த ரஞ்சித் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் தற்போது இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் கவுண்டம்பாளையம்.
இந்த படம் கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்ட பின்னர் படத்தின் இயக்குனரும் நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆணவ படுகொலை குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக கூறிய அவர் “ஆணவ படுகொலை என்பது வன்முறையோ, கலவரமோ கிடையாது.
தங்கள் பிள்ளைகள் மீதான அக்கறையின் வெளிப்பாடு. நாம் பயன்படுத்தும் பைக்கை ஒருவர் திருட முயற்சி செய்தால் அவரை தாக்க முற்ப்படுகின்றோம். நாம் பயன்படுத்தும் காலணியை ஒருவர் மாற்றி எடுத்து சென்றால் அவரிடம் சண்டையிடுகின்றோம். அப்படி இருக்கும் பொழுது குழந்தைகள் என்பது அவர்களை பெற்று வளர்த்த பெற்றோருக்கு மிக முக்கியம்.
இவை அனைத்தும் உணர்ச்சிவசப்பட்டு செய்வதுதான் என்று கூறியிருந்தார். இந்த பேட்டி மிகப்பெரிய வைரலானதை தொடர்ந்து நெட்டிஷன்கள் பலரும் அவரை திட்டி பதிவிட்டு வந்தார்கள். இந்நிலையில் நடிகர் ரஞ்சித்தின் பேச்சு சமூக அமைதியை சீர்குலைப்பதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு புகார் அளித்திருக்கின்றார்.
அந்த புகாரில் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தில் திட்டமிட்டு விசிக-வை அவமானப்படுத்தும் நோக்கில் காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றது. இப்படத்தில் ஆணவக் கொலைகளை நியாயப்படுத்தும் வகையில் ரஞ்சித் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். சமூகத்தின் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் ரஞ்சித் பேசி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வன்னியரசு புகார் தெரிவித்து இருக்கின்றார்.