tamilnadu
கோவில் திருவிழாவில்… பழங்குடியின பெண்கள் அன்னதானம் வழங்குவதற்கு எதிர்ப்பு… அதிர்ச்சி சம்பவம்…!
தர்மபுரி மாவட்டம், பாபிரெட்டிபட்டி அருகே மிகப் பிரசித்தி பெற்ற கோவில் இருளப்பட்டி காளியம்மன் கோவில். இந்த கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் அங்கு வந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இந்த கோவில் இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் தேர் திருவிழா இங்கு நடைபெறுவது வழக்கம்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் தேர்த்திருவிழா இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர்கள் சுகன விலாசம் மற்றும் அனிதா. அனிதா வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்திருக்கிறார்கள்.
அப்போது இந்த கோவிலில் வந்து குழந்தை வரம் கேட்டு வேண்டி இருக்கிறார்கள். இதையடுத்து அனிதாவுக்கு குழந்தை பிறந்ததால் பரிகாரமாக நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக இருளப்பட்டி தேர் திருவிழாவில் 2500 பக்தர்களுக்கு உணவு சமைத்து அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால் அங்கு வந்த சிலர் அனிதாவை அன்னதானம் வழங்க விடாமல் தடுத்து கோவிலை விட்டு வெளியேற்றி இருக்கிறார்கள்.
இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து அவர் கூறியதாவது “நான் இந்த இருளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவள். எனக்கு திருமணமாகி கணவருடன் ஊத்தங்கரையில் வசித்து வருகிறேன். திருமணமாகி சில காலம் எனக்கு குழந்தை இல்லாததால் குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு நேர்த்திக்கடன் வைத்திருந்தோம். தற்போது குழந்தை பிறந்துள்ளது.
அதற்கு பரிகாரமாக தற்போது அன்னதானம் வழங்க வந்தோம். அப்போது மாற்று சமூகத்தை சார்ந்த ஒரு சிலர் பழங்குடியின பெண்ணான நீங்கள் அன்னதானம் வழங்கக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைய இங்கு நாங்கள் வேண்டுதல் நிறைவேற்ற ஒத்துழையுங்கள் என்று கெஞ்சி கேட்டோம். எங்களை கோயிலில் இருந்து விரட்டி விட்டார்கள்.
இதையடுத்து அங்கு வந்த போலீசாரிடம் நாங்கள் அன்னதானம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். போலீசார் எங்களை இங்கிருந்து வெளியேற்றுவதில் தான் குறியாக இருந்தார்கள். நாங்கள் எவ்வளவு சொல்லியும் போலீசார் எங்களை கோயில் பகுதியில் இருந்து வெளியேற்றி விட்டனர். அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அரசின் அனுமதி பெற்று அன்னதானம் இடுவதற்கு அனுமதிக்காமல் எங்கள் சமையல் சிலிண்டரையும் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினார்கள்.
ஒருவழியாக மாலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டோம்” என்று தெரிவித்திருந்தார். அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காளியம்மன் கோவிலில் பழங்குடியின பெண் அன்னதானம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.