tamilnadu
தமிழகத்தில் நாளை… இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… ஆரஞ்சு அலர்ட்…!
தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. தமிழகத்தில் நாளை அனேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டம் மலைப்பகுதிகள் நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.