Latest News
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை… ஒரு கிராம் 7 ஆயிரத்தை நெருங்கியது… நகை பிரியர்கள் அதிர்ச்சி…!
இந்தியாவில் சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும். கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 12 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை பவுனுக்கு 2,200 வரை குறைந்தது. இது இல்லத்தரசிகளிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இருந்தே தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வந்தது. இது படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை மீண்டும் 54,000 கடந்து விற்பனையாகி வந்தது. தங்கத்தின் விலை கடந்த 16ஆம் தேதி மீண்டும் 55 ஆயிரத்து 040 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் அதைத்தொடர்ந்து சற்று சறுக்களை சந்தித்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்தது.
இதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கம் விலை 160 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி இருக்கின்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 840க்கும், ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 6,980 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 98 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.