tamilnadu
தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்கள் தான்… அவங்க பாதுகாப்பும் முக்கியம்… நீதிபதி கருத்து…!
ராமநாதபுரம் மாவட்டம் மோர் பண்ணை மீனவ கிராமத்தை சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “தமிழக மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
கடந்த ஜூன் இரண்டாம் வாரத்தில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதை தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதி நெடுந்தீவு பகுதியை சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்தனர். கடந்த ஜூலை ஒன்றாம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 25 மீனவர்களை கைது செய்தனர். இந்த மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் மீனவர்களை இப்படி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடிப்பது, அவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவது, அதுமட்டுமில்லாமல் கிருமிநாசினியை தெளித்து மனித உரிமை மீறலை செய்வது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்ட போது மத்திய அரசு பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்தது .
ஆனால் தமிழக மீனவர்கள் விஷயத்தில் அது போன்ற எதுவும் செய்யவில்லை இலங்கை கடல்படையினரால் கைது செய்யப்பட்டு இருக்கும் மீனவர்களை விடுவிக்க தேவையான சட்ட உதவிகளை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வு தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்கள் தான். அவர்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானது. ஒன்றிய அரசு தரப்பில் மீனவர்களை விடுவித்து தமிழகம் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த பிரச்சனை மற்றொரு நாடோடு தொடர்புடையது. ஆகவே தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.