Latest News
போராட்டத்திற்கு சென்ற ஆசிரியர்கள்… வகுப்பறையில் பாடம் நடத்தி அசத்திய மாணவ மாணவிகள்…!
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய மாநில முன்னரிமையை கொண்டு வந்திருக்கக் கூடிய அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. இந்நிலையில் கோவில்பட்டி புது ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. 250 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட எட்டு பேர் பணியாற்றி வருகிறார்கள்.
மேலும் 2 ஆசிரியர்கள் மாற்றுப் பணி காரணமாக பணியில் இருக்கிறார்கள். ஆசிரியர்களின் போராட்டத்தில் பங்கேற்பதற்காக எட்டு ஆசிரியர்கள் சென்று விட்டார்கள். தலைமை ஆசிரியர் சுப்ராயன் என்பவரும் பயிற்சியில் பங்கேற்க சென்று விட்டார். ஒரு ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருந்த நிலையில் பெரும்பாலான வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி இருந்தன.
இருப்பினும் ஒவ்வொரு வகுப்பிலும் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகள் பாடங்கள் நடத்தி அசத்தினார்கள். தங்களது ஆசிரியர்கள் கற்பித்த பாடங்களை மாணவ மாணவிகள் கரும்பலகையில் எழுதி போட்டு சக மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்கள். இது மற்ற மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.