tamilnadu
தமிழகத்தில் குரங்குஅம்மை பாதிப்பு கிடையாது… அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்…!
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்து இருக்கின்றார். சென்னை சைதாப்பேட்டையில் நிருபர்களிடம் அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்திருந்ததாவது: “முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் சைதாப்பேட்டை மருத்துவமனை, கொளத்தூர் புறநகர் மருத்துவமனை உள்ளிட்டவை பல்வேறு மருத்துவமனைகளை மேம்படுத்தி தந்து வருகின்றது.
வருகிற ஜனவரி மாதம் பணிகள் நிறைவடைந்து முதல்வர் மு க ஸ்டாலின் இந்த மருத்துவமனையை திறக்க இருக்கின்றார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் மட்டும்தான் மருத்துவ காப்பீடு திட்டம் மிகச் சிறப்பான வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்பாட்டில் இருக்கின்றது.
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் இதுவரை மூன்று லட்சத்து 13 ஆயிரத்து 864 புறநோயாளிகள் பயனடைந்து இருக்கிறார்கள். உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இல்லை என்று மத்திய மந்திரி நட்டா அறிவித்திருக்கின்றார்.
தமிழ்நாட்டிலும் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் கிடையாது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஆடை தவிர்த்து தெரிகிற உடல் பகுதியில் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இருக்கின்றதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். யாருக்காவது அந்த பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.