இந்தியாவில் கொரோனா வைரஸ் பற்றிய பீதி அதிகமாகியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்க கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றோடு 4000 பேருக்கு மேல் காவு வாங்கியுள்ளது. மேலும் எல்லா நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸ் பீதியால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளதாகவும் 40 பேருக்கு மேல் வைரஸ் அறிகுறி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளே கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் நோய் வருமுன்னே காப்பதே சிறந்தது என்பதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்கள் சளி இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை போரூரைச் சேர்ந்த செல்வராஜ் என்ற மாணவர் தனக்கு சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுப்பதாக தலைமையாசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது சமூகவலைதளங்களில் பரவி மாணவனுக்கு பாராட்டைப் பெற்றுள்ளது.