Latest News
பிரியாணி போட்டி வச்சு… தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட ஓட்டல் மேலாளர்… போலீஸ் அதிரடி ஆக்சன்…!
கோவையில் அனுமதி கேட்காமல் பிரியாணி போட்டி வைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஹோட்டல் மேலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
கோவை ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டிகளை கொண்டு புதிய ஹோட்டல் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலில் நேற்று முன்தினம் பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. அதில் அரை மணி நேரத்தில் 6 பிளேட் பிரியாணியை சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் 4 பிளேட் சாப்பிட்டால் 50 ஆயிரம் ரூபாயும், 3 பிளேட் சாப்பிட்டால் 25 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு காரணமாக போட்டியில் பங்கேற்பதற்கு ஏராளமான மக்கள் ஓட்டல் முன்பு திரண்டார்கள். மேலும் பலர் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அங்கு ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை இயங்கி வருகின்றது. பொதுமக்கள் வந்து செல்லும் முக்கியமான சாலை என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த வாகனங்களை நிறுத்திய 30க்கும் மேற்பட்டவருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனார்.
இந்நிலையில் பிரியாணி போட்டி நடத்திய ஓட்டல் மேலாளர் கணேஷ் என்பவர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அனுமதி இன்றி போட்டி நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸ் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.