Latest News
பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போக போறீங்களா…? தொடங்கியது ரயில் டிக்கெட் முன்பதிவு…!
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
பொங்கல் பண்டிகை இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றது. வருகிற ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகையும், 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் பண்டிகையும், 16ஆம் தேதி காணும் பொங்கல் பண்டிகையும் கொண்டாடப்படுகின்றது. பொங்கலுக்கும் முந்தைய நாள் திங்கட்கிழமை 13 ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகின்றது .
அரசு விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வருவதால் பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இப்போது மக்கள் திட்டமிட தொடங்கி இருக்கிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக உள்ள சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை நாட்கள் என்பதால் பொங்கல் கொண்டாட சொந்த ஊர் செல்ல இப்போது இருந்தே பயணத்தை திட்டமிட்டு வருகிறார்கள்.
இதனால் ஜனவரி 10ம் தேதி முதல் பொங்கல் பயணம் தொடங்குகிறது. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போகி பண்டிகை அன்று ஒரு நாள் விடுமுறை போட்டால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்பதால் முன்பதிவு செய்ய ஆர்வமுடன் இருந்து வருகிறார்கள். ரயிலில் உறுதியான டிக்கெட் கிடைப்பது என்பது பெரிய சவாலாக இருக்கின்றது. 120 நாட்களுக்கு முன்பாகவே பயணத்தை திட்டமிட்டு இன்று முன் பதிவு செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்வதற்கு இன்று காலை 8 மணிக்கு பொங்கல் பயணத்திற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. டிக்கெட் எடுப்பதற்கு சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அண்ணா நகர், பெரம்பூர், டி நகர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் பயணிகள் காத்திருந்தார்கள். அதிகாலை 5 மணிக்கு வந்து வரிசையில் காத்திருந்து டிக்கெட்களை முன்பதிவு செய்தார்கள்.
முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் அனைத்தும் நிரம்பியது. நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, முத்துநகர், பாண்டியன், தென்காசி, பொதிகை, திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி அனைத்தும் நிரம்பிவிட்டன. டிக்கெட் கவுண்டர்களில் வரிசையில் நின்ற ஒரு சிலருக்கு மட்டுமே டிக்கெட் உறுதியானது கிடைத்தது.
மற்றவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விட்டார்கள், ஐ ஆர் சி டி சி இணையதளம் வழியாக பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்தபடி முன்பதிவு செய்து இருக்கிறார்கள். இதனால் கவுண்டர்களில் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் கிடைத்தது. தென்மாவட்ட ரயில்கள் சேலம், கோவை, திருப்பூர் மார்க்க ரயில்கள் அனைத்தும் பெரும்பாலும் நிரம்பி விட்டது. ரயில் கட்டணம் குறைவாக இருப்பது மட்டுமில்லாமல் பாதுகாப்பாக செல்ல முடியும் என்று மக்கள் விரும்புவதால் அதிக வேர் ரயில்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர். ஜனவரி 11ஆம் தேதிக்கு செல்ல விரும்புபவர்கள் நாளை வெள்ளிக்கிழமையும், ஜனவரி 12-ம் தேதி வருகிற 14-ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்ய தயாராக இருக்கிறார்கள்.