tamilnadu
தொடர் விடுமுறை… தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள்… கடும் கூட்ட நெரிசல்…!
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு இருக்கின்றது.
நாளை சுதந்திர தின விடுமுறை மற்றும் அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறையை ஒட்டி சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். சொந்த ஊருக்கு செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு இருக்கின்றது.
இந்நிலையில் தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் தொடர்ந்து படையெடுத்து வருகிறார்கள். பேருந்துகள் மட்டும் இல்லாமல் சொந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களிலும் மக்கள் செல்வதற்கு தயாராகி வருகின்றார்கள். இதன் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் அருகே மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கின்றன. ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சீர் செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதிகளவு பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகின்றது. 4 நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.