பழனி பஞ்சாமிர்தம் தரமாக வழங்கப்படுகின்றது. தேவையில்லாமல் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருக்கின்றார்.
திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்த லட்டுவில் மாட்டு கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம் செய்த நிறுவனம் தான் பழனி கோயிலுக்கும் நெய்விநியோகம் செய்து வருவதாக தகவல் வெளியானது.
இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து பேசி அவர் தெரிவித்திருந்ததாவது “கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வரும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்து மட்டும்தான் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.
பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு முழுக்க முழுக்க ஆவின் நெய் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பழனியில் பஞ்சாமிர்தம் மிகத் தரமாக தயாராகின்றது. தேவைக்கு அதிகமாக நெய் தேவைப்படும்போது தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுகின்றது. அந்த தனியார் நிறுவனம் தற்போது புகாருக்குள்ளான நிறுவனம் இல்லை. பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் எச்சரித்து இருக்கின்றார்.