tamilnadu
கேரளாவில் இந்த 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை… வானிலை தகவல்…!
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதிலிருந்து மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகிறார்கள். மேலும் சிலரின் உடல் கண்டுபிடிக்கப்படாத காரணத்தால் தொடர்ந்து தேடுதல் பணியும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது: “பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருக்கின்றது. அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சூர் மற்றும் பாலக்காடு தவிர மற்ற மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரை ஓரங்களில் கடல் நீர் ஊடுருவல் குறித்து கடலோரக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கனமழை பெய்யும் போது மக்கள் இரவு நேரங்களில் ஹைரேஞ்ச் வழியாக பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். பாலடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.