tamilnadu
பாஜகவுடன் ரகசிய உறவு வச்சுக்க வேண்டிய அவசியம் இல்ல… முதல்வர் மு க ஸ்டாலின் பதிலடி..!
பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தங்களுக்கு கிடையாது என்று முதல்வர் மு க ஸ்டாலின் கூறியிருக்கின்றார்.
திருவெற்றியூரில் உள்ள எம்எல்ஏ கேபி சங்கர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார். அங்கு மேடையில் பேசி இருந்த அவர் தெரிவித்திருந்ததாவது: “கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதனால் மகிழ்ச்சியில் எனக்கு தூக்கமே வரவில்லை.
திமுகவினரை விட கலைஞரைப் பற்றி மத்திய மந்திரி ராஜநாத் சிங் சிறப்பாக பேசினார். ராஜ்நாத் சிங் கலைஞரைப் பற்றி பேசியதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கலைஞரை பற்றி அப்படி புகழ்ந்து பேச வேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிற்கு அவசியமே இல்லை . அவர் உள்ளத்தில் இருக்கும் உண்மையை பேசினார். அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடும்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் இருக்கும்.
அண்ணா, கலைஞர் பெயரிலான நாணயத்தில் மட்டும்தான் தமிழ் இடம்பெற்று இருக்கின்றது. கலைஞரின் பெயரிலான நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற வாசகம் உள்ளது. இதை புரிந்து கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வாய்த்திருக்கின்றார். மேலும் கலைஞர் நாணய வெளியீட்டு விழா திமுக நிகழ்ச்சி அல்ல, மத்திய அரசின் நிகழ்ச்சி, மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தியை அழைக்கவில்லை.
பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி மாதிரி ஊர்ந்து சென்று பதவி வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. திமுக எதிர்த்தாலும் ஆதரித்தாலும் கொள்கையோடு இருக்கும் என்று இந்திரா காந்தியே தெரிவித்து இருக்கின்றார். சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கூட பாஜகவுக்கு எதிராக தான் தீர்மானம் நிறைவேற்றினோம்” என்று அந்த விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் பேசியிருந்தார்.