Latest News
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…!
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகின்றது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. ஒரு சில மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கின்றது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் தொடர்ந்த அவதி அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை இந்த மாதத்தில் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையே இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. இதில் வடகிழக்கு பருவ மழை தான் தமிழகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் வடக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
மாலத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் உருவாகிவரும் நிலையில் அது குறைந்த காற்றழுத்த தாழ்வாக உருவாகும் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
மேலும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது. வரும் 6-ம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.