tamilnadu
மேலும் ஒரு வழக்கு… கைதான எம் ஆர் விஜயபாஸ்கருக்கு அடுத்தடுத்து வந்த சிக்கல்…!
எம் ஆர் விஜயபாஸ்கர் ஏற்கனவே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மற்றொரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் என்பவர் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திர பதிவு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜய் பாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் மீது புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பெயரில் 13 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் திருச்சூரில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் போலியான நான்டிரேசபிள் சான்றிதழ் கொடுத்து அதற்கு உடந்தையாக இருந்த சென்னை வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜ் கைது செய்யப்பட்டார். இதனிடையே எம் ஆர் விஜயபாஸ்கர் மீது தற்போது தொழிலதிபர் பிரகாஷ் மேலும் ஒரு புகார் கொடுத்து இருக்கின்றார்.
அதில் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்திருந்தார். இதையடுத்து போலீசார் திருச்சி வந்து சிறையில் இருக்கும் எம் ஆர் விஜயபாஸ்கரை கைது செய்ததாக குறிப்பாணை கடிதத்தில் கையெழுத்து வாங்கியிருக்கின்றார்.