tamilnadu
9 பேருக்கு நல்லாளுமை விருது… முதல்வர் மு.க ஸ்டாலின் கௌரவம்…!
அரசு துறையில் புதுமைகளை புகுத்தி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய 9 பேருக்கு நல்ல ஆளுமை விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்று நடந்த சுதந்திர தின விழாவின் போது முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “கலைஞா் மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்த தரவுகளை சரியான முறையில் பிரித்து பயனாளிகளைத் தோ்வு செய்ததற்காக, முதல்வரின் முகவரித் துறை தலைமைத் தொழில்நுட்ப அலுவலா் த.வனிதா, உயா்கல்வியில் மாணவா்கள் சோ்க்கை விகிதத்தை உயா்த்தியதற்கு விருதுநகா் மாவட்ட கலெக்டர் வீ.ப.ஜெயசீலன்,
உலகின் சிறந்த நூல்களைத் தமிழில் மொழிபெயா்க்க வழிவகை செய்த பொது நூலகங்கள் துறை இயக்குநா் க.இளம்பகவத், உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தை சிறப்பாக நடத்தி வருவதற்காக உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் ந.கோபால கிருஷ்ணன், காலை உணவுத் திட்டத்துக்காக மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ச.திவ்ய தா்ஷினி, நான் முதல்வா் திட்டத்துக்காக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோா் நல்லாளுமை விருதுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அரசுப் பள்ளி மாணவா்களைத் தலை சிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்ததற்காக, தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் அமைப்பின் உறுப்பினா் செயலா் இரா.சுதன், இணைய வழியில் பட்டா மாறுதல் செய்யும் வசதியை உருவாக்கிய நிலஅளவை திட்ட இயக்குநா் ப.மதுசூதன்ரெட்டி, வரி ஆய்வுப் பிரிவு மூலம் வணிகவரியைப் பெருக்கியதற்காக துறை ஆணையா் டி.ஜகந்நாதன் ஆகியோரும் நல்லாளுமை விருதுக்கு தோ்வாகியுள்ளனா். விருதாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்களை கோட்டை கொத்தளத்தில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்” என்று கூறப்பட்டுள்ளது.