Latest News
தமிழகத்தில் மதுவிலக்கு வருமா? வராதா…? அமைச்சர் முத்துசாமி கொடுத்த விளக்கம்…!
தமிழகத்தில் டாஸ்மாக் கடையை நடத்துவதில் முதலமைச்சருக்கு துளி அளவும் விருப்பம் இல்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்து இருக்கின்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ம் தேதி மது போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற இருக்கின்றது. இந்த கூட்டணியில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அதிமுகவை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசும் பொருளாக மாறியது.
இந்நிலையில் ஈரோட்டில் மதுவிலக்கு ஆயத்தீர்வுதுறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் விசிக மாநாடு குறித்தும் மதுவிலக்கு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் தெரிவித்திருந்ததாவது: “திமுக அரசை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு நடத்தவில்லை.
கொள்கை ரீதியான முடிவுக்காக மாநாடு நடத்துகிறார்கள். விசிக மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என்பது பொதுவான அழைப்பு மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதலமைச்சருக்கு எள்ளளவும் விருப்பமில்லை. மது கடைகள் என்றாவது ஒருநாள் மூடப்பட வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணம்.
ஒரே நாளில் உத்தரவு போட்டு மது கடைகளை மூடிவிடலாம். உடனடியாக மூடினால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். இங்குள்ள சூழலை பொறுத்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம்” என்று அமைச்சர் முத்துசாமி பேசியிருந்தார்.