விருதுநகரில் சரக்கு என சொல்லி சுக்கு காபியை 300 ரூபாய்க்கு விற்றுள்ளது ஒரு கும்பல்.
உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இரண்டு நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது.
இந்நிலையில் அதற்குள் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து அத்திமீறி நுழைந்து மதுபாட்டில்களை திருட முயற்சி செய்துள்ளனர். மேலும் மது கிடைக்காத மன உளைச்சலில் தமிழகத்தில் 5 இடங்களில் குடி நோயாளிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. கேரளாவில் இந்த எண்ணிக்கை 7 ஆக இருக்கிறது. இந்நிலையில் இது போன்ற பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக தினமும் 12 மணி முதல் 2 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என ஒரு செய்தி சமூகவலைதளங்களில் பரவின. ஆனால் அது பொய் என தமிழக அரசு அறிவித்தது. இதனால் பிளாக்கிலாவது சரக்கு வாங்கிக் குடிக்க வேண்டும் என ஆங்காங்கே மது அடிமைகள் தவித்து வருகின்றனர். இவர்களின் ஆசையைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றும் வேலைகளும் சிறப்பாக நடந்து வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை இதுபோல மது வாங்குவதற்காக ஒரு கும்பல் காத்திருந்துள்ளது. அப்போது அங்கே வந்த இரு இளைஞர்கள் அங்கிருந்தவர்களிடம் தங்களிடம் மது உள்ளதாகக் கூற, அதை நம்பிய அவர்கள் 300 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். உடனே மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் செல்ல இவர்கள் சரக்கைக் குடிக்கலாம் என திறந்தபோது பாட்டிலில் இருந்தது சரக்கு அல்ல சுக்குக்காபி எனக் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.