tamilnadu
சென்னையில் மழை வெள்ளத்தை சமாளிக்க தயாராக இருக்கிறோம்… மாநகராட்சி மேயர் பிரியா…!
தமிழகத்தில் வரப் போகின்றது பருவமழை.. கடந்த காலங்களைப் போல சென்னை மழை வெள்ளத்தில் மிதக்குமா? இல்லை தப்பிக்குமா? என்ற கேள்வி சென்னைவாசிகளிடையே அதிகரித்திருக்கின்றது. இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை சமாளிக்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து மேயர் பிரியா ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியானது வைரலாகி வருகின்றது.
அந்த பேட்டியில் அவர் தெரிவித்து இருந்ததாவது: “கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநகராட்சி சார்பில் வெள்ளக்கசடு தணிப்பு, பல இடங்களில் மழைநீர் கால்வாய் அமைப்பதற்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை செய்து இருக்கின்றோம். இந்த ஆண்டு கவுன்சிலர்கள் குறுகிய தெருகளிலும் வடிகால் கட்டுவதற்கு கோரிக்கை வைத்துள்ளார்கள். மூன்று அடுக்குக்கு மூன்று அடி என்ற அளவில் வடிகால் அமைப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கும் சாலைகளை ஆய்வு செய்து வருகின்றோம்.
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒவ்வொரு வார்டுக்கும் தலா 10 பணியாளர்களை தனியார் நிலையில் வைத்திருந்தோம். இந்த முறை 200 வார்டுகளுக்கும் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். கடந்த மாதம் முதல் வடிகால் தூர்வாரும் பணியிலும், சேறுகளை அகற்றும் பணியிலும் அவர்கள் ஈடுபட்டார்கள். நகரில் 33 கால்வாய்கள் இருக்கின்றது.
இந்த கால்வாய்களில் நீர்மட்டம் உயரும்போது ஓடை நிரம்பி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும். இதை தவிர்ப்பதற்கு அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டு இருக்கின்றது. இவை தண்ணீரை நன்றாக வெளியேற உதவும். சென்னையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழை பெய்யும். டிசம்பரில் அதிக மழை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதமே மழை பெய்ய தொடங்கிவிட்டது.
தினமும் இரவில் மழை பெய்து வருகின்றது. காலநிலை மாற்றம் கடுமையாக இருக்கின்றது. மழை தொடங்கி இருப்பதால் நவம்பர் மற்றும் டிசம்பரில் அதிக மழைப்பொழிவு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அனைத்தையும் சமாளிக்க மாநகராட்சி தயாராகி வருகின்றது. மேலும் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றது.
மேலும் சுரங்கப்பாதையில் நீர்மட்டம் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டினால் சென்சார் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை ஏற்படும். உடனே அந்த பகுதிகளை ஒரு அதிகாரிகளை வைத்து ஒருங்கிணைத்து பிரச்சனைகளை தீர்க்க உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் 45 சென்டிமீட்டர் மழை பெய்தது. இந்த ஆண்டும் அதிக மழை பெய்தாலும் அதை சமாளிக்கும் வகையில் சென்னையில் முழு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. கடந்த ஆண்டு வெள்ளத்தால் மகாபலிபுரம் சாலையில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த ஆண்டு தண்ணீர் தேங்காமல் இருக்க அந்தப் பகுதிகளிலும் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.