Latest News
வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு…!
வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதால் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் ஆங்காங்கே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. மேற்கு திசை வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வந்தது.
அண்ணா சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வந்தது. இதனால் சென்னையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது “வங்க கடலில் வரும் 5-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்று தாழ்வு பகுதி உருவாகுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு வாரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலை முதலே மேகமூட்டத்துடன் இருப்பதால் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மலைக்கு வாய்ப்பு இருக்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.