Latest News
இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!
தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
வடமேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய வங்க கடல் பகுதியில் நிலை கொண்டு இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கு அருகே 280 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால் ஊருக்கு கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இது வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இன்று மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று மாலை அல்லது இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை பூரி மற்றும் திகா பகுதிகளுக்கு இடையே கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கின்றது. சென்னையை அடுத்துள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் நாகப்பட்டினத்தில் 1-ம் எண் கொண்ட புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கின்றது.
கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை ஏற்பட்டுள்ளதாகவும், துறைமுகங்கள் பாதிக்கப்படாமல் பலமாக காற்று வீசும் என்ற அர்த்தம். தமிழகத்தில் நாளை முதல் வரும் 14ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.