Latest News
கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 83 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட்… வெளியான ரிப்போர்ட்…!
கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 83 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு பாஸ்போர்ட் என்பது மிக அவசியம். பாஸ்போர்ட் இல்லாமல் செல்பவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்படுகின்றனர். வேலை, படிப்பு மற்றும் சுற்றுலா என பல்வேறு தேவைகளுக்காக இந்தியர்கள் நமது நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு சென்று வருகிறார்கள்.
இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் 3 கோடியே 8 லட்சத்து 93 ஆயிரத்து 577 பெண்கள், 5 கோடியே 73 லட்சத்து 77 ஆயிரத்து 716 ஆண்கள் என மொத்தம் 8 கோடியே 82 லட்சத்து 71 ஆயிரத்து 293 பேர் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கின்றது.
மேலும் பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவில் 98 லட்சத்து 92 ஆயிரத்து 840 பேருக்கு கடந்த ஆண்டு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 98 லட்சத்து 11 ஆயிரத்து 366 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 87 லட்சத்து 85 ஆயிரத்து 792 பேருக்கும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்ட பட்டியலில் தமிழகம் நான்காம் இடத்தில் இருக்கின்றது. தமிழகத்தில் மொத்தம் 83 லட்சத்து 54 ஆயிரத்து 892 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது.