tamilnadu
6 மாசம் சம்பளம் கொடுக்கல… மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்… பரபரப்பு சம்பவம்…!
நெல்லை மாவட்டம், மானூர் யூனியனுக்கு உட்பட்ட சேதுராயன் புதூர் தெருவை சேர்ந்தவர் பிச்சம்மாள். இவருக்கு 55 வயதாகின்றது. இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார். அப்போது தனது கையில் ஒரு மண்ணெண்ணெய் கேனை மறைத்து வைத்து வந்தார்.
இதனை அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த போலீசார் பார்த்து அந்த மண்ணெண்ணெய் கேனை அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை செய்த போது அவரது கையில் இருந்த மனுவை வாங்கி படித்தார்கள். அந்த மனுவில் தான் சேதுராயன் புதூர் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறேன்.
சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் நிலையில் 6 மாதமாக எனக்கு சம்பளம் வழங்கவில்லை. இது தொடர்பாக நான் கேட்கும் போது என்னை சிலர் மிரட்டுகிறார்கள். நான் மானூர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் இது தொடர்பாக புகார் அளித்தேன். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனக்கு பதிலாக 2-வது வார்டு உறுப்பினரை தூய்மை காவலராக நியமித்து விட்டதாக தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது தெரிவித்திருந்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு இவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.