யெஸ் பேங்க் நிதி நெருக்கடியில் சிக்கி ரிசர்வ் பேங்கின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இப்போது கரூர் வைஸ்யா பேங்கின் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை அதில் இருந்து எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
எஸ் பேங்க் நிதி நெருக்கடியில் சிக்கி, மோசமான சூழலில் இருந்ததால் ரிசர்வ் பேங்க் அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. நிதி மோசடி செய்ததாக அதன் நிறுவனர் ராணா கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அதன் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 50000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் தனியார் வங்கிகளின் மீதான நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் இழந்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக கரூர் வைஸ்யா பேங்கின் வாடிக்கையாளர்கள் பலர் தங்கள் முதலீடுகளை திரும்ப எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அந்த வங்கி நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் ‘கடந்த 1916 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நமது வங்கி சிறந்த மூலதனத்தை கொண்டு லாபகரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதில் உறுதியாக உள்ளோம். அதனால் வாடிகையாளர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.