tamilnadu
கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு நிகழ்வு… நாணயத்தை வெளியிட்டார் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்..!
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா தமிழக அரசு சார்பாக இன்று சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜநாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கின்றார். இந்த விழாவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை தாங்குகின்றார்.
மேலும் திமுகவின் பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகிக்கின்றார். இந்த விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
முன்னதாக கருணாநிதி 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இன்று விமானம் மூலமாக சென்னை வந்தடைந்த ராஜநாத் சிங் கருணாநிதி நாணய வெளியிட்டு விழாவை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து விழா நடைபெறும் இடத்திற்கு சென்ற அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கருணாநிதி நூற்றாண்டு நூறு ரூபாய் நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்பு உரையாற்றினார். அதை தொடர்ந்து தற்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய மந்திரி ராஜநாத்சிங் வெளியிட்டு இருக்கின்றார்.