முழுவதும் குணமான நபர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி !

முழுவதும் குணமான நபர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி !

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுவதும் மீண்டுவிட்டதாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட நபர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்க கொரோனா வைரஸ் பாதிப்பு இன்றோடு 4000 பேருக்கு மேல் காவு வாங்கியுள்ளது. மேலும் எல்லா நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த வைரஸ் பீதியால் உலக மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளதாகவும் 40 பேருக்கு மேல் வைரஸ் அறிகுறி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளே கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் நோய் வருமுன்னே காப்பதே சிறந்தது என்பதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நபர் முழுவதும் குணமடைந்து விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த வாரம் அறிவித்தார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில்  ‘நம் மாநிலத்துக்கு ஒரு நல்ல செய்தி. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபரின் ரத்தத்தில் தற்போது கொரோனா வைரஸ் இல்லை. அவர், இவ்வளவு வேகமாகக் குணமடைந்ததற்குக் காரணம் மிகச்சிறந்த சிகிச்சையும், மருத்துவர்களின் நிபுணத்துவமும்தான். தற்போதைய நிலவரப்படி தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக உள்ளது.’ எனத் தெரிவித்து இருந்தார்.

இதனால் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்த நபர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் இப்போது அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சீனாவில் இதுபோல முற்றிலும் குணமானவர்கள் சிலருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தகக்து.