tamilnadu
சென்னைவாசிகளே… சாலையில் கவனமாக செல்லுங்கள்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!
சென்னை சாலைகளில் பல இடங்களில் சாக்கடை மூடிகள் வேகத்தடைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை மாநகரசாலையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆபத்தான சாக்கடை மூடிகள் மற்றும் வேகத் தடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த இரண்டு மாதங்களாக தன்னார்வலர்கள் 100 பேர் சாலையில் மேற்கொண்ட ஆய்வில் 201 இடங்களில் ஆபத்தான வேகத்தடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 205 இடங்களில் சாக்கடை மூடிகள் விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. வேகத்தடைகள் 10 சென்டிமீட்டர் உயரம் 12 அடி அகலத்தில் தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த விதிகளை மீறி வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. வேகத்தடை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் 400 மீட்டருக்கு முன்பாக வைக்க வேண்டிய அறிவிப்பு பலகைகளும் இல்லாமல் இருக்கின்றது.
இது போன்ற காரணத்தினால் இந்த வேகத்தடை உயிருக்கு ஆபத்தானவையாக பார்க்கப்படுகின்றது. அதேபோல் சாக்கடைக்குழி மூடிகள் மற்றும் சாலைகளில் உள்ள மழை நீர் வடிகால் குழிகளும் பல இடங்களில் சாலை அளவைவிட குறைவாக இருக்கின்றது. இந்த குழிகள் விபத்தை உருவாக்கும் குழிகளாக மாறி இருக்கின்றன .சாலை உயரத்தை அதிகரிப்பதும் இந்த முடிகளை சாலை அளவில் வைக்காமல் அலட்சியமாக செயல்படுவதால் இந்த மூடிகள் சாலை உயரத்தை விட அதிகமாக இருக்கின்றது.
இது விபத்தை ஏற்படுத்துகின்றது. இதே போன்று 61 இடங்களில் சாக்கடை கால்வாய்களும் ஆபத்தானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தமிழக அரசுக்கு அறப்போர் இயக்கம் சார்பாக மனு வழங்கப்பட்டுள்ளது . முதலமைச்சர் மற்றும் மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த மனுவில் விபத்துக்கு காரணமாக இருக்கும் வேகத்தடைகள், சாக்கடை மூடிகள், கழிவு நீர் கால்வாய்கள் சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றது.