கடலூர் மாவட்டத்தில் கணவன் மனைவி இருவரும் ஒரே இரவில் அடுத்தடுத்து தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். ஒவருக்கு மகேஸ்வரி என்ற பெண்ணோடு ஒரு வருடத்துக்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவரும் தனியாக வீடு எடுத்து தனித்து வாழ்ந்து வந்துள்ளனர். இப்போது மகேஸ்வரி 8 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் மணிகண்டன் அதிகமாகக் குடிப்பதால் கணவன் மனைவிக்கு இடையே அதிகமாக தகராறு எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல மணிகண்டன் குடித்து விட்டு வர மகேஸ்வரி அவரிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது போதையில் மணிகண்டன் மயங்கிவிட மகேஸ்வரி தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் போதை தெளிந்து எழுந்த மணிகண்டன் தானும் அதே துப்பட்டாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அடுத்த நாள் காலை வீட்டில் இருந்து இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் சொல்லப்பட்டது அவர்கள் வந்து சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.