tamilnadu
அடுத்து ஒரு வாரத்திற்கு இடி, மின்னல், மழை… வானிலை கொடுத்த அலெர்ட்…!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் ,தென் தமிழக உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை பொருத்தவரையில் லேசான மழை பதிவாகி இருக்கின்றது.
அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரை மதுரை விமான நிலையத்திலும், கரூர் பகுதியிலும் 38.5 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18 டிகிரி செல்சியஸும் பதிவாகி இருக்கின்றது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் பலத்த காற்று வீசும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.