Latest News
அடுத்த ஐந்து நாட்களுக்கு நீடிக்க போகும் மழை!…என்ன சொல்லியிருக்கிறது ஆய்வு மையம்?…
மேற்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை அவ்வப்போது வெளுத்து வாங்கியது. காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. சென்னையிலும் இதே நிலை தான் இருந்து வந்தது. இந்நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை குறித்த அறிவிப்பினை சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சொல்லப்பட்டிருக்கிறது. மேற்கு திசை காற்றின் காரணமாக நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்த வரை அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருக்கிறது.
இன்று முதல் இம்மாதம் ஐந்தாம் தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.