Latest News
சொல்லி 5 வருஷம் ஆச்சு… இப்ப வரைக்கும் என்ன செஞ்சீங்க… மத்திய அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி…!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கூறி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை என்ன செய்தீர்கள் என்று மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பி இருக்கின்றது.
மதுரையைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதால் ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் வாழ்க்கை தரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும். தென் தமிழகத்தை சேர்ந்த மக்கள் சிறந்த மருத்துவ வசதியை பெறுவதற்கும் வாய்ப்பாக இருக்கும்.
எனவே இதை கருத்தில் கொண்டு 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு பிரதமர் மோடியால் நேரில் வந்து அடிக்கல் நாட்டப்பட்டது. இருப்பினும் இன்னும் கட்டுமான பணிகள் நடைபெறாமல் நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பல வழக்குகள் மதுரை ஐகோர்ட்டில் தொடங்கப்பட்டது. பல்வேறு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை எந்தவிதமான கட்டுமான பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவுபடுத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கச் சொல்லி உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு நீதிபதிகளான சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வக்கீல் ஆஜராகி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக டெண்டர் விடப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டு 2026க்குள் நிறைவடைந்து விடும். இடையில் கொரோனா காலம் என்பதால் தாமதம் ஆகிவிட்டது என்று தெரிவித்திருந்தார் .
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் கொரோனா காலகட்டத்தை காரணம் காட்ட வேண்டாம். அதற்கு முன்பும் பின்பும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். விசாரணை முடிவில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போதும் நிறைவடையும் என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் எழுத்து பூர்வமான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கை வருகிற செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பு வழங்கினார்கள்.