Latest News
விநாயகர் சதுர்த்தி விடுமுறை… தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள்… ஊருக்குப் போக ரெடியா…!
விநாயகர் சதுர்த்தி வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,315 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்து இருக்கின்றது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்து இருக்கின்றது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்ததாவது: “விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு வரும் 6-ம் தேதி முகூர்த்த தினம், 7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி, 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர் விடுமுறையை கணக்கில் வைத்து சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளை காட்டிலும் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்து இருக்கிறார்கள். அதன் படி திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 5,6 மற்றும் 7-ம் தேதிகளில் 1030 பேருந்துகளும், எட்டாம் தேதி கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
மேலும் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்திருக்கின்றது. இது மட்டுமில்லாமல் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 350 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தமாக 2315 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களுக்கு திரும்பும் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டிருக்கின்றது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.