tamilnadu
கவர்னரின் தேநீர் விருந்து… முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு…!
கவர்னர் வழங்கும் தேநீர் விருந்தில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார்.
பொதுவாக சுதந்திர தின விழா, குடியரசு தின விழாவின்போது தமிழக கவர்னர் மாளிகையில் முதல்வர்கள், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று மாலை தேநீர் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக கவர்னர் ஆர் என் ரவி அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்பதற்கு ஏற்கனவே அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தது.
கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக தமிழக காங்கிரஸ் கட்சி, மார்க்கிஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து கவர்னர் தேநீர் விருந்தில் முதல்வர் மு க ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து சுதந்திர தினத்தை ஒட்டி கவர்னர் ஆர் என் ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு அமைச்சர் பங்கேற்று இருக்கிறார்கள். அதிமுக சார்பாக ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள்.
பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்று இருக்கிறார்கள். மேலும் நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர். சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்ட வரும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். முன்னதாக முதல்வர் மு க ஸ்டாலின் கவர்னர் ஆர் என் ரவியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.