தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றது. அனைத்து பலகையிலும் தமிழை பயன்படுத்துவதை கட்டாயமாக வேண்டும் எனவும், அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறையும் தொழிலாளர் நல ஆணையமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இல்லையென்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதை முழுமையாக செயல்படுத்தவில்லை.
இந்நிலையில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்பு 50 ரூபாய் என்று இருந்த அபராதமானது தற்போது 2000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும். அவர்கள் பிற மொழியை பயன்படுத்துவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அந்த பெயர் பலகையில் தமிழ் பெரிய அளவில் இருக்க வேண்டும். அதாவது தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பெயர் 5:3:2 என்ற வகையில் இடம் பெற்று இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் தமிழ் பெயர் பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.











