Latest News
வெளுத்து வாங்கிய பேய் மழை…இன்னும் தொடருமா?…
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் உள்ள சில மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இந்நிலையில் இந்த மழை பொழிவானது இன்று வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் நேற்றைய அறிக்கை சொல்லியிருந்தது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சொல்லியிருந்தது. நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கணித்திருந்தது சென்னை வானிலை ஆய்வு மையம்.
அதே போல தரைக் காற்றின் வேகம் மணிக்கு முப்பது முதல் நாற்பது கிலோ மீட்டர் வரை வீசும் என்றும் சொல்லியிருந்தது.
தமிழகத்தின் பல இடங்களில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பொழிந்துள்ளது.
கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் தமிழகத்தின் நான்கு இடங்களில் மிகக் கன மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் – 37 செ.மீ, வால்பாறையில் – 25 சென்டி மீட்டரும், அப்பர் பவானியில் -25 செ.மீட்டரும், சின்னக்கல்லாற்றில் -23 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.
இதே போல தமிழகத்தின் ஐந்து இடங்களில் கன மழை பெய்துள்ளது. மலைப்பகுதிகளில் பெய்து வந்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை பத்து மணி நிலவரப்படி அங்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.