tamilnadu
வெறும் 3 லட்சத்தை கொடுத்துட்டு ஒதுங்கிவிட்டா எப்படி..? இதையெல்லாம் செய்யணும்… தமிழக அரசுக்கு வலியுறுத்திய ராமதாஸ்…!
பணியின் போது உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்திற்கு வெறும் மூன்று லட்சம் ரூபாயை வழங்கிவிட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டதாக ராமதாஸ் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டான் ஒன்றியம் கல்லாதுரையைச் சேர்ந்த மின்வாரிய பணியாளர் செந்தில்குமார் என்பவர் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்த செய்தியை கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பணியில் இருக்கும் போது செந்தில்குமார் உயிரிழந்த சம்பவத்திற்கு அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
இந்த இறப்புக்கு மின்சார மின்சார வாரியம் தான் முழு பொறுப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் மறைந்த செந்தில்குமாரின் குடும்பத்திற்கு வெறும் 3 லட்சம் ரூபாயை இழப்பீடு தொகையாக வழங்கிவிட்டு தமிழக அரசு ஒதுங்கி விட்டது.
இது நியாயம் அல்ல, மனசாட்சியுடனும் மனிதநேயத்துடனும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகளை தமிழக அரசு தட்டிக் கழிக்கக்கூடாது. செந்தில்குமாரின் குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும்” என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருக்கின்றார் ராமதாஸ்.