முதல்வரின் செயல்பாடுகள் பூஜ்ஜியம் என்பதால் தான் வெள்ளை அறிக்கையை வெளியிட மறுத்து வருகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கின்றார்.
இது தொடர்பாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்ததாவது:” திமுக பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை இருக்கிறேன் என கூறிக்கொண்டு பதவி ஏற்ற 40 மாதங்களில் நான்கு முறை குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று விட்டார் ஸ்டாலின்.
இந்தியாவில் மற்ற மாநில முதலமைச்சர்கள் அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டை விட மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாக தான் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. தெலுங்கானா முதல்வர் ஆகஸ்ட் 2024 அமெரிக்கா சென்று சுமார் 31,000 கோடியை ஈர்த்து வந்தார். கர்நாடக தொழில்துறை மந்திரி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி இருவரும் கடந்த அக்டோபரில் அமெரிக்கா சென்ற சுமார் 25 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்த தாக கூறப்படுகின்றது.
தமிழகத்தில் இருந்து சென்ற ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் தங்கி சைக்கிள் ஓட்டுவது சினிமா பார்ப்பது என கூறிவிட்டு வெறும் 7600 கோடி முதலீடை தான் ஈர்த்து இருக்கின்றார். கடந்த மார்ச் மாதம் துபாய்க்கு குடும்பத்துடன் சுற்றுலா மேற்கொண்டு ஈர்த்த முதலீடு 6100 கோடி, மே மாதம் ஜப்பான் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடு 3,233 கோடி. இப்படி 4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் சுமார் 18,000 கோடி ஈர்க்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கு போடப்பட்டது. இந்த முதலீடுகளை திமுக அரசு ஜனவரி 2024 இல் நடந்த உலகத் தொழிலாளர் மாநாட்டில் சென்னையிலேயே கையெழுத்திட்டு இருக்கலாம். ஆனால் இங்கிருந்து இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்ததாக கூறிக் கொண்டு வருகின்றார்.
தொழில் வளர்ச்சி என்பது ஒரு தொடர் நடவடிக்கை. ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் விமான நிலையத்தில் கொடுத்த பேட்டியில் எனது ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 10% கூட நிறைவேற்றப்படவில்லை என்ற கருத்தை கூறியுள்ளார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளின் நிலை துவங்கப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெள்ளை அறிக்கையாக கேட்டிருந்தேன் .
ஆனால் முதலமைச்சரின் செயல்பாடு வெறும் பூஜ்ஜியம் என்பதால் வெள்ளை அறிக்கையை வைக்க மறுத்து வருகின்றார். சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்ற பழமொழி முதலமைச்சரின் செயல்பாடுகளை பார்க்கும்போது நினைவுக்கு வருகின்றது. தன்னுடைய வார்த்தை ஜாலம் மூலம் அனைவரையும் ஏமாற்றி விடலாம் என்ற கற்பனையில் மிதக்கின்றார் ஸ்டாலின். சிலரை சில நாள்தான் ஏமாற்ற முடியும், பலரை பலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்பது ஸ்டாலின் உணரும் காலம் வரும்” என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருக்கின்றார்.