tamilnadu
அரசு பள்ளிகளில் சீருடை வழங்க எதுக்கு எவ்வளவு லேட்… எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்…!
பள்ளி சீருடைகள் வழங்குவதில் திமுக அரசு தாமதம் செய்து வருவதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை ஒரு முறை கூட குறித்த காலத்தில் பொது மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலையை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்குவதில்லை.
குறித்த நேரத்தில் தமிழகம் நெசவாளர்களுக்கு பணியானை வழங்குவதில்லை. தரமற்ற நூல்களை வழங்கி நெருக்கடியை ஏற்படுத்தி வெளிமாநிலங்களில் இருந்து வேட்டி சேலைகளை வாங்கி நிலைமையை தொடர்ந்து சமாளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழக விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
தங்களது தறிகளை எடைக்கு போடும் சூழ்நிலையும், கஞ்சி தொட்டி திறக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக பலமுறை நாங்கள் திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும், சட்டமன்றத்தில் பலமுறை அரசின் கவனத்தை ஈர்த்திருக்கின்றோம். ஆனால் அதற்கு எந்த பலனும் இல்லை.
இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா 4 செட் சீருடைக்கு பதில் மூன்று செட் சீருடைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 4 செட் வழங்கியுள்ளதாக கணக்கு காட்டப்பட்டு திமுக ஆட்சியாளர்கள் அரசுக்கு பல கோடி ரூபாயை நஷ்டம் ஏற்படுத்துகிறார்கள். குறித்த காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை உடனடியாக வழங்கவும், விலையில்லா வேட்டி சேலையை பொதுமக்களுக்கு பண்டிகை காலத்தில் குறித்த நேரத்தில் வழங்கவும் விலையில்லா வேட்டி சேலை மற்றும் சீருடைகள் நெய்வதற்கான வேலைகளை தமிழக நேசவாளர்களுக்கு மட்டுமே வழங்கிடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். தமிழக நெசவாளர்களின் வாழ்க்கையை ஒளிரச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.