tamilnadu
அனைவரும் விரும்பும் திமுக ஆட்சி… முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் பெருமிதம்…!
பக்தர்கள் மட்டுமல்ல அனைவரும் விரும்புவது திமுக ஆட்சியை தான் என்று முதல்வர் மு க ஸ்டாலின் பெருமையாக பேசி இருக்கின்றார். பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்திருந்ததாவது: “சேகர் பாபு அமைச்சர் தலைமையில் அறநிலைத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
பக்தர்கள் அனைவரும் விரும்பும் ஆட்சியை திமுக அரசு வழங்கி வருகின்றது. முருகன் கோவில சிறப்பு நிதி ஒதுக்கி பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன. பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. ஆறுபடை ஆன்மீக சுற்றுப்பயணத்திற்கு 813 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கட்டணம் எதுவும் இன்றி முடி காணிக்கை செலுத்தும் திட்டம் நடைமுறையில் இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கைகளுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் தடையாக இருக்காது. திடீரென்று மாநாடு நடத்தவில்லை, பல திருப்பணிகளை செய்த பிறகு பழனி மாநாடு நடைபெறுகின்றது.
கோவில் வளர்ச்சிக்கும் அதில் பணியாற்றுபவர்களின் முன்னேற்றத்திற்கும் தமிழக அரசு துணையாக இருக்கும். கோவில்களில் தினக்கூலி தொழிலாளர்களாக இருந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டு இருக்கின்றது. திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடமாக பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகின்றது. ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். கோயில் கருவறைக்குள் மனிதர்களிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ வேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும், அறத்தால் உலகம் நன்றாகும்” என்று பேசினார்.