Latest News
துணை முதல்வர் பதவி… ஏமாற்றம் இருக்காது…? முதல்வர் மு.க ஸ்டாலின் சொன்ன பதில்…!
அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்விக்கு கட்டாயம் ஏமாற்றம் இருக்காது என்று முதல்வர் மு க ஸ்டாலின் பதிலளித்து இருக்கின்றார்.
தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்பட இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது மட்டும் இல்லாமல் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவார் எனவும் கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்து பிறகு அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று கூறிவந்தனர்.
கடந்த 17ஆம் தேதி திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய திமுகவின் மூத்த நிர்வாகியான எஸ் எஸ் பழனி மாணிக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவிப்பதில் ஏன் தாமதம் என்று பேசி இருந்தார்.
இதை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு திமுக இளைஞரணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சென்னை கொளத்தூரில் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வந்து ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து ஜிகேஎம் காலணியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தொடக்கப்பள்ளியையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்ற கேள்விக்கு ஏமாற்றம் இருக்காது என பதில் அளித்து இருக்கின்றார். அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது நிச்சயமாக மாற்றம் இருக்கும் என்பதை தான் அவர் அப்படி குறிப்பிட்டு இருக்கின்றார் என்று தெரிவித்து வருகிறார்கள்.