Entertainment
போகலாமா…வேண்டாமா குற்றாலத்துக்கு?…இன்றைய சீசன் நிலவரம்…
குற்றாலத்தில் நேற்று முன்தின இரவிலிருந்தே அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்துக் கொட்டியே வருகிறது தண்ணீர். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூட்டம் கூடியது. அலைமோதிய மக்கள் கூட்டத்தினால் ஸ்தம்பித்தது குற்றாலம். ஆனால் நேற்று அதிகாலையிலிருந்தே நிலைமை தலைகீழாகத்தான் இருந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியிருந்தது. அதே போல மழை பெய்துள்ளது. இதனால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இன்ப சுற்றுலா வந்த பயணிகளுக்கு காத்திருந்தது அதிர்ச்சி.
அளவு கடந்து கொட்டிய தண்ணீரால் பாதுகாப்பு காரணங்களால் பொது மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முழுவதுமே குற்றாலத்தில் இதமான காற்று, சிலு, சிலு சாரல் ரம்மியமான சூழலே இருந்தது.
ஆனால் குளிக்க விடுக்கப்பட்டிருந்த தடையினால் இந்த இயற்கை கொஞ்சும் குற்றாலத்தின் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பினர் சுற்றுலாப் பயணிகள்.
இன்று அதே நிலை தான் நீடித்து வருகிறது. வெயிலின் தாக்கம், குறைவே இதமான தென்றல் காற்று, அவ்வப்போது விழுந்து வந்த சாரல் என மனதை மயக்கும் நிலையில் தான் குற்றாலம் இருந்து வந்தது இன்று கால பத்து மணி வரை.
சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று காலை பத்து மணி வரை குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. விரைவில் இந்த நிலை மாறும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. வெளியூர்களிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க விடப்பட்டுள்ள தடை விரைவில் நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.