ஜூன், ஜூலை மாதங்கள் வந்து விட்டால் சுற்றுலா பிரியர்களின் மனதில் முதலாவதாக நினைவுக்கு வருவது குற்றாலம் தான். தென்காசி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த குற்றால அருவிகளில் குளிக்க தமிழ்நாடு மட்டுமல்ல அன்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகா, ஆந்திரவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து விடுவர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், கேரளாவில் பெய்யும் மழையை பொருத்தும் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து இருக்கும். இந்தாண்டு குற்றாலத்தில் சீசன் துவங்கியுள்ளது.
இந்த வாரத்துவக்கத்தில் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது. ஒரு சில அருவிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் குளிக்க தடையும் விதிக்கப்பட்டது.

நேற்று முதல் இந்த தடையானது நீக்கப்பட்டு அனைத்து அருவிகளிலும் குளித்து நீராட அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் ஆர்வமாக குளித்து மகிழ்ந்தனர். இன்று காலை பதினோறு மணி நிலவரப்படி அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.
வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்ததால் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்து குளு, குளு சூழல் மாறி இன்று மந்தமான நிலையே இருந்து வந்தது. சாரல் மற்றும் காற்றும் நேற்று போல் இல்லாமல் இன்று குளிர்ச்சி இல்லாத நிலை இருந்து வருகிறது.
வேலை நாட்கள் என்பதால் மக்கள் கூட்டம் மிதமாகவே இருந்து வருகிறது. நாளையும், நாளை மறு நாளும் வார விடுமுறை நாட்கள் என்பதால் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலையில் இருந்த நிலை நாளையும் நீடித்தால் அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலா பிரியர்களுக்கு சற்று ஏமாற்றத்தையே தரும் படியாவே இருந்து விடும் என்ற அச்சமும் இருந்து வருகிறது.











