தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 10,462 எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றது. இந்த தர வரிசை பட்டியலில் 42,436 மாணவ மாணவிகள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் ஒரு இடத்திற்கு நான்கு பேர் போட்டி போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு மக்கள் நல்வாழ்வுத்துறை இணையதளத்தில் இன்று தொடங்கியது. அதன்படி அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்கள் காலை 10 மணி முதல் இணைய வழியில் பதிவு செய்து கட்டணம் செலுத்தி இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள். 27ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் மருத்துவக் கல்லூரி இடங்களை தேர்வு செய்யலாம்.
28ஆம் தேதி தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்படும். 30 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை இட ஒதுக்கீடு ஆணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இட ஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டும்.
இதில் மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு கலந்தாய்வு நாளை ஓமந்தூர் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெற இருக்கின்றது.
காலை 8 மணிக்கு விளையாட்டு வீரர்களும், 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளும் 9 மணிக்கு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கின்றது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் நீட் ஹால் டிக்கெட், மதிப்பெண் அட்டை, 10, 11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.